Tweet

My Blog List

Total Pageviews

Sunday, April 22, 2012

நிலநடுக்கம்... நாம் செய்தது சரியா?

இந்தோனேஷியாவின் அச்சேவில் தேர்தல் களேபரங்கள் மாறாத இரண்டாவது நாள் அது. பூமி அதிர்ந்தது. கிட்டத் தட்ட 495 கி.மீ. தொலைவில், கடலில் 33 கி.மீ. ஆழத்தில் 8.6 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் சுனாமி தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்றும் இந்தோனேஷிய அரசு அறிவித்தது. கடந்த 2004-ல் ஏற்பட்ட சுனாமியின்போது 1.7 லட்சம் பேரை சுனாமிக் குப் பறிகொடுத்த மாகாணம் அச்சே. இப்படி ஒரு சூழலில் தமிழர் களாகிய நாம் அச்சேவில் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம்?

இந்த இடத்தில், கடந்த வாரம் தமிழகம் முழுக்க மிதமாக நிலம் அதிர்ந்ததை நாம் எப்படி எதிர்கொண்டோம் என்பதைச் சற்று நினைவுக்குக் கொண்டுவாருங்கள். அலுவலக லிஃப்ட்டுகள் நிரம்பி வழிய, அவசர அவசரமாக வெளியேறியதையும்... அடுக்கு மாடி அலுவலகக் கட்டடத்தின் கீழ் ஒரு பொதுக் கூட்டத்துக்காக நிற்பதுபோலக் கூடி நின்றதையும்... எல்லோரும் எல்லோரிடமும் ஒரே நேரத்தில் செல் பேச முற்பட்டு, தொலைத்தொடர்புச் சேவையை முடக்கியதையும்... சாலைகள் ஸ்தம்பிக்க பாலங்களின் மீது வாகனங்களில் காத்திருந்ததையும்...



ஆனால், அச்சேவில் என்ன நடந்தது தெரியுமா? நிலநடுக்கத்தை உணர்ந்த அடுத்த நொடி, பள்ளிக் குழந்தைகள் மேஜை, நாற்காலிகளுக்குக் கீழே பதுங்கினர். 'பதற்றப்படாதீர்கள்’ என்று கூறிக்கொண்டே ஆசிரியர்கள் அவர்களை வேகமாக - ஆனால், வரிசையாக மாடிப் படிகள் வழியாகக் கீழே இறக்கி திறந்தவெளிக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்கள், கடும் பாதிப்பு அடைந்தவர்கள், அதற்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் என்று முன்னுரிமை அடிப்படையில் நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். எழுந்து ஓடும் நிலையில் இருக்கும் நோயாளிகள் ஓடவில்லை. அவர்கள் காத்திருந்தனர்... தங்களுக்கான அழைப்பை எதிர்பார்த்து. வீடுகளில் இருந்தவர்கள் வெளியேறி திறந்தவெளியில் நின்றனர். சாலைகளில் பயணித்துக்கொண்டு இருந்தவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தினர்... பெரும் கட்டடங்களும் மரங்களும் பாலங்களும் அருகில் இல்லாத இடங்களாகப் பார்த்து. அப்புறம் மேட்டுப் பகுதியாகப் பார்த்துப் புறப்பட்டனர் அமைதியாக.

கடந்த ஆண்டு பூகம்பம், சுனாமி, அணுக் கதிர்வீச்சு ஆகியவற்றின் தாக்குதலை ஒருசேர எதிர்கொண்ட ஜப்பானில் நடந்ததும் இதுதான். பூகம்பத்தால் உருக்குலைந்த அன்றைய இரவு ஜப்பானியர்கள் கடைகளைத் திறந்தார்கள். சேதாரங்களின் இடையே மிஞ்சிய ரொட்டி களையும் புட்டிகளில் அடைக்கப்பட்ட உணவையும் மக்களுக்கு விநியோகித்தார்கள். மக்கள் நீண்ட வரிசையில் நின்று அமைதியாக அவற்றைப் பெற்றுச் சென்றார்கள். ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து வழக்கத்துக்கு மாறாக ஆயிரக்கணக்கான மடங்கு கதிர்வீச்சு வெளியேறிய நிலையிலும்கூட ஃபுகுஷிமாவைச் சுற்றி இருந்தவர்கள் ஜப்பானிய அரசின் அறிவுரைப்படி, முதலில் அணு உலைக்கு மிக அருகில் இருந்தவர்கள், அடுத்து அருகில் இருந்தவர்கள், அடுத்து சற்றுத் தொலைவில் இருந்தவர்கள் என்று பல்வேறு கட்டங்களாகவே வெளியேறினர்.

இந்தியாவில் இடர்களின்போது நேரடியாக ஏற்படும் உயிர் இழப்புகளைக் காட்டிலும், நெரிசலால் ஏற்படும் உயிர் இழப்புகளே அதிகம். ஒரு நிலநடுக்கத்தை நீங்கள் உணரும்போது, கதை அதோடு முடிந்துவிடுவது இல்லை; நூற்றுக்கும் மேற்பட்ட அதிர்வுகள் அடுத்தடுத்துக் காத்திருக்கும். நம்முடைய அரசாங்கம் எப்போது இதை எல்லாம் நமக்குச் சொல்லித்தரப்போகிறது?

நாம் பாதுகாப்பான வழியிலேயே தப்பிக்க  நினைக்கிறோம். ஆனால், அது பாதுகாப்பானதுதானா?

Courtesy :Vikatan

0 comments:

Post a Comment